20 ஜூலை, 2009

கோசின்ரா கவிதை

மதமாற்றம்



ஏன்
மதம் மாறுகிறீர்கள்?

உங்களுக்காக அவதரித்த
கடவுள்களிடமிருந்து
பிரிந்து போகிறீர்கள் நீங்கள்

வாமனன் அவதாரத்தில்
கயவன் மாபலியைக்
கொன்றதை
எப்படி மறந்தீர்கள்?

இராமர் அவதாரத்தில்
துஷ்டன்
இராவணனைக் கொன்றது
உங்களுக்கு
சந்தோஷம் இல்லையா?

எல்லாம் உங்களுக்காகத்தான்
ஏன் மதம் மாறுகிறீர்கள்?

நீங்கள்
எப்படி மறந்தீர்கள்
ஆதிசங்கரரை ?

தங்கமுலாம் பூசிய
மனுதர்மத்தை?

எப்படி மறந்தீர்கள்
அருள்பாலிக்கிற
நம் கடவுள்களை?

அவர்கள்
நம்மிடமிருந்து
உங்களை பிரிக்கிறார்கள்.

நீங்கள் கடவுளின் குழந்தைகள்.

கடவுளின் குழந்தைகள்
எப்படி மதம் மாறுவீர்கள்.

நீங்கள் உயிரோடே
கொல்ல்ப்பட்டிருக்கிறீர்கள்
நீங்கள் ஊரைவிட்டு
தள்ளிவைக்கப்பட்டிருகிறீர்கள்.

நீங்கள்
கல்லால் அடித்து
கொல்ல்ப்பட்டிருக்கிறீர்கள்.

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்

அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?

நீங்கள் சிந்திக்கிறீர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்

நம்புங்கள்
நமக்கு சொர்க்கம்
காத்திருக்கிறது
நான் இறந்த பிறகு.

மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள் .

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்.

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது?

- Thanks "என் கடவுளும் என்னைப்போல் கருப்பு"; குமரன் பதிப்பகம்

[ ... ]

19 ஜூலை, 2009

வா.மு.கோமு கவிதை


எப்படி சவ்ரீயம்




பறையனை
பறையன் என்றே கூப்பிடு.
மாதாரியை
மாதாரி என்றே கூப்பிடு.
அந்தந்த பொருளை
அதனதன்
பெயர் கொண்டே கூப்பிடு
என் அனுமதியின்றி
தாயலி என்பதை நீயாக
சேர்த்து கூப்பிடுவாயானால்
உன் சாதியோடு
அதே வார்த்தையை சேர்த்து
நானும் உன்னைக் கூப்பிட
ஒரு சடக்கை
நேரம் கூட ஆகாது.
எப்படி சவ்ரீயம்?

- Thanks "சொல்லக் கூசும் கவிதைகள்", Uyirmmai publications
[ ... ]

17 ஜூலை, 2009

இடம்-பொருள்


இடம்-பொருள்



அனுதினமும் உன் நினைவில்
அப்ரைஸல் இல்லை எனும் கவலை!
ஒரு மாலை நேரபொழுதில்
சாலை ஓர குடிலில் காது கொடுத்து கேட்டுப்பார்!
உன்னால் முடியாது
நடந்தால் இடை ஒடியும் உனக்கு!
முடிந்தால் தூதுவிட்டு வேவுபார்

நீ அனுதினமும் முனகும் அதே வார்த்தை,
கெஞ்சும் மழலை மொழிகொண்டு
கொஞ்சம் பிரித்து வாசிக்கபட்டிருக்கும்

ஆனால் அதிக கண்ணீருடன்,
அதீத சோகத்துடன்,
அதிக ஏக்கத்துடன்,
அதீத கவலையுடன்
"அப்பா ரைஸ்" இல்லை என்று....
வார்த்தைகளுக்கு இடம்-பொருள் உண்டு.

- முத்துகுமார்.கோ
[ ... ]

11 ஜூலை, 2009

சுய விலக்கம்

சுய விலக்கம்



நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக ..."
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்
கண்டுபிடிக்கக்கூடும் என்னை

- Thanks 'Keetru.com' & ஆதவன் தீட்சண்யா

[ ... ]

கண்ணாடி உடையும் சத்தம்

கண்ணாடி உடையும் சத்தம்




தூக்கிலிடப்பட்டாற் போன்று
சுவற்றின் உச்சியில் தொங்கிக்கொண்டு
தரையிறங்க மறுக்கும் இப்புகைப்படத்திலிருந்து
இதோ வெளியேறிக் கொண்டிருக்கிறேன்

நாற்புறமும் மறித்துப் பூட்டப்பட்ட சட்டகச்சிறைக்குள்
மங்கி மகிமையிழந்து பழுப்பேறும் இப்புகைப்படத்தில் நீடிப்பது
அப்படியொன்றும் பெருமைக்குரியதல்ல.

நீர்த்தேடியலையும் வேரின் தாகமூறி
மண்நோக்கித் தாழும் கால்களை முறித்து
விண்ணுக்கு மீறுமெனது சிரசையும் அறுத்து
ஒரு சட்டகத்திற்குள் மடங்கிப் பொருந்திக்கொள்ளாமல்
எப்போதும் அதிருப்தியை பெருகவிட்டுக் கொண்டிருக்கும்
எனது ஒவ்வாமையும் ஒழுங்கீனமும்
புகைப்படத்தின் அமைதியை குலைத்துக் கொண்டிருப்பதை நானறிவேன்

சூனியக்காரியின் வசியக்கட்டுக்குக் கீழ்ப்படியும் ஏவல் பிண்டமாய்
புகைப்படக்காரனின் கண்ணசைப்பையும் கைஜாடைகளையும் மட்டுமே
நீங்கள் பின்தொடரும் நிலையில்
நான் மட்டும் ஒரு தெத்துப்பல்லைப்போல
என்னிஷ்டத்திற்கு நிற்பது குறித்த உங்களது குமைச்சல்
தெள்ளுப்பூச்சியைப்போல் அரித்துக்கொண்டிருக்கிறது
புகைப்படத்திற்குப் பதிலாக உங்களையே

ஒதுக்ப்பட்ட சிற்றிடத்தில் ஒண்டிக்கொண்டு
மிகுந்த சௌகர்யத்தோடு இருப்பதான பாவனை பூசி
சிரித்தபடியே காட்சிதரும் இங்கிதம் பழகாத என்னை
உதறியெறிய முடியாமல் உடன்வைத்துக் கொள்வதில்
உமக்கேற்படும் சங்கடங்களைத் தவிர்க்கும் பொருட்டும்
நான் வெளியேறித்தானாக வேண்டும்

காமிரா கோணங்களுக்காக
உட்கார வைக்கப்பட்டவர்கள் சொகுசாய் உட்கார்ந்தபடியேயும்
நிற்பவர்கள்
காலொடிய நின்றே சலிக்கும்படியாயுமிருக்க
முன்வரிசை என்று ஏமாற்றி தரையமர்த்தப்பட்டவர்கள்
எழுந்து நின்று இளைப்பாறவும் வழியற்ற இப்புகைப்படத்தின்
கண்ணாடிக்குள் பாய்ந்து வெளியேறுகிறேன் ரத்தம் சொட்ட

என்னால் உருவாகும் வெற்றிடம்
காட்சியின்பத்தைக் கெடுக்கவல்லதாகையால்
பிதுங்கி வழியும் உங்கள் சதைகளை அறுத்துப் பரப்பியோ
பணிதல்மிக்க பிளாஸ்டிக் பொம்மையிலொன்றை நிற்க வைத்தோ
அவசரமாய் நிரப்பியடையுங்கள் அவ்விடத்தை

நானில்லாத புகைப்படத்தில்
நீங்கள்
புதிய சௌகர்யங்களை உணரக்கடவதாகுக.

-Thanks 'Theeranathi' & ஆதவன் தீட்சண்யா
[ ... ]

உதயகுமார்.ஜி கவிதை

எனக்கும் ஆசைதான்

என் தேவதை
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
நித்தம் புத்தாடைகள் உடுத்த,

உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
மகிழுந்தில் வலம்வர,

உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
தினமொரு நங்கையோடு தோழியெனக்
கூறித் தெருவெல்லாம் சுற்ற,

உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
வக்கிரங்களை வாய்ப்புகள்
கிடைக்கும்போது ஏவிவிட,

உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
வெளிநாடுகள் சுற்றி பணக்காரப்
பெண்ணை மணமுடிக்க,

உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
தாய்மொழி தமிழேயானாலும்
ஆங்கிலத்தில் அலப்பறை செய்ய,

ஆனால்
செருப்புப் பாராத பாதங்களும்,
பசியில் கவனிக்கும் பாடங்களும்,
விடாமல் வாட்டும் வறுமையும்,
மழையில் குளமாகும் பள்ளிகளும்,

இறுதிவரைத் தரவேயில்லை
நான் மென்பொருள்
பொறியாளனாகும் வாய்ப்பை

- Thanks 'keetru.com'

[ ... ]