20 ஜூலை, 2009

கோசின்ரா கவிதை

மதமாற்றம்



ஏன்
மதம் மாறுகிறீர்கள்?

உங்களுக்காக அவதரித்த
கடவுள்களிடமிருந்து
பிரிந்து போகிறீர்கள் நீங்கள்

வாமனன் அவதாரத்தில்
கயவன் மாபலியைக்
கொன்றதை
எப்படி மறந்தீர்கள்?

இராமர் அவதாரத்தில்
துஷ்டன்
இராவணனைக் கொன்றது
உங்களுக்கு
சந்தோஷம் இல்லையா?

எல்லாம் உங்களுக்காகத்தான்
ஏன் மதம் மாறுகிறீர்கள்?

நீங்கள்
எப்படி மறந்தீர்கள்
ஆதிசங்கரரை ?

தங்கமுலாம் பூசிய
மனுதர்மத்தை?

எப்படி மறந்தீர்கள்
அருள்பாலிக்கிற
நம் கடவுள்களை?

அவர்கள்
நம்மிடமிருந்து
உங்களை பிரிக்கிறார்கள்.

நீங்கள் கடவுளின் குழந்தைகள்.

கடவுளின் குழந்தைகள்
எப்படி மதம் மாறுவீர்கள்.

நீங்கள் உயிரோடே
கொல்ல்ப்பட்டிருக்கிறீர்கள்
நீங்கள் ஊரைவிட்டு
தள்ளிவைக்கப்பட்டிருகிறீர்கள்.

நீங்கள்
கல்லால் அடித்து
கொல்ல்ப்பட்டிருக்கிறீர்கள்.

நம் கடவுள்கள்
யானைகளாகவும்
காளைகளாகவும்
பறவைகளாகவும்
வந்திருக்கின்றனர்

அவன் ஒரு சண்டாளனாக
ஒரு தலித்தாக ஏன்
பிறக்கவில்லையென்று
கேட்கிறீர்கள்?

நீங்கள் சிந்திக்கிறீர்கள்
அது உங்களை
எங்களிடமிருந்து பிரித்துவிடும்

நம்புங்கள்
நமக்கு சொர்க்கம்
காத்திருக்கிறது
நான் இறந்த பிறகு.

மதம் மாறாதீர்கள்
உங்களையே நீங்கள்
சிலுவைக்குள் அறைந்து
கொள்ளாதீர்கள் .

உங்களுக்கு நீங்களே
குல்லாய் மாட்டி விடாதீர்கள்.

நாய்களே
நீங்கள் போய்விட்டால்
இந்த மதத்திற்கு
யார்தான்
தாழ்ந்த சாதியாக இருப்பது?

- Thanks "என் கடவுளும் என்னைப்போல் கருப்பு"; குமரன் பதிப்பகம்