21 அக்டோபர், 2012

மழை - பொழப்பு


மழை 
====

மிஞ்சிப்போனா என்னசொல்லிற முடியும் உன்னால 
இந்த மழையைப் பத்தி
ஓதமேறுன கொட்டாய்ல 
கோணில மொடங்கியும் 
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட 
சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா 
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்துசெத்த சொந்தத்த 
எடுக்க வக்கத்து பொணத்தோட 
ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க 
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு 
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம 
உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு 
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா 
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ 
மழை ஜன்னலுக்கு வெளியதான் எப்பவும் பெய்யுது உனக்கு 
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

- ஆதவன் தீட்சண்யா
[ ... ]

30 ஆகஸ்ட், 2012

பேயோன் பக்கம்


முதல் முறையாக என்னைப் படிப்பவனுக்கு….

-பேயோன் பக்கம்

புளி கரையும் வயிற்றுக்காரா,
ஏதேதோ புத்தகம் புரட்டி
எதிலும் திருப்தி காணாமல்
கடைசியில் என்னைத் தேர்ந்து
படிக்கிறாயா?
பிடித்துக்கொள்ள
சிமென்ட் சுவர்,
சரிந்து உட்காரக்
கால் ஆடா நாற்காலி,
அரும்பு வியர்வை
துடைக்கக் கைக்குட்டை,
உதறும் கரங்களால்
மார்பில் கொட்டிக்கொண்டு
குடிக்க சுத்தமான குடிநீர்,
தொய்ந்த கையிலிருந்து
புத்தகத்தை நழுவவிட
மாப்பிங் செய்துலர்ந்த தரை,
கைத்தாங்கலுக்கு
நேச உள்ளங்கள் நான்கு,
சோடா வாங்கிவரப் பையன்,
சார்ஜுள்ள செல்பேசியின்
ஸ்பீட் டயலில் 108
இதுகளனைத்தும்
இருக்கிறதா உன்னிடம்?
வா, சகா, வா, சகி!

-பேயோன்
[ ... ]